இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எபேசியர் 4:22-24 ஆம் வசனப் பகுதியை வாசிக்கும்போது பவுலானவர் நமக்கு பல சவாலான வசனங்களைத் தருகிறார். இந்த வசனங்கள் ஒவ்வொன்றையும் ஒரு நாளுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்வோம். இன்று, நாம் நம் இருதயங்களை தேவனிடம் ஒப்புக்கொடுத்தோம் என்பதை பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் கிறிஸ்தவர்களாக ஆனபோது நம்முடைய பழைய மனிதனை கிறிஸ்துவோடு சிலுவையில் அறைந்து விட்டோம் (ரோமர் 6:6). இப்படிப்பட்ட ஒப்புவித்தலை நாம் ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும் என்று இயேசு நமக்கு நினைவூட்டுகிறார் (லூக்கா 9:23). நாம் ஒவ்வொரு நாளும் பழைய பாவ வாழ்க்கையை ஒதுக்கி வைக்க வேண்டும் - "உங்கள் பழைய சுயத்தை விட்டு விடுங்கள்" - மற்றும் தேவனின் கிருபைக்கு பதிலளிக்கும் விதமாக இயேசுவுக்காக வாழ நம்மை ஒப்புவிக்க வேண்டும். இந்த "பழைய மனிதனை கலைவது " ஏன் மிகவும் முக்கியமானது? ஏனென்றால், கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதற்கு முன்பு நம்முடைய வாழ்க்கை முறை பாவச் செல்வாக்குகளாலும், சாத்தான் நம்மில் மீண்டும் எழுப்ப விரும்பும் வஞ்சக ஆசைகளாலும் நிறைந்திருந்தது. எனவே, இந்தப் புத்தாண்டைத் தொடங்கும் வேளையில், தேவனின் திருவுளத்தின் கீழ் மகிழ்ச்சியுடன் வாழ முற்படும்போது, தினமும் நம்மை மனப்பூர்வமாக அவருக்கு அர்ப்பணிப்பதை நமது ஆவிக்குரிய பழக்கமாக்கிக் கொள்வோம்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் சர்வவல்லவருமான பிதாவே , என் அன்பான அப்பா பிதாவாக நான் உம்மை கிட்டி சேருகிறேன் . நான் எப்பொழுதும் உம்மை கனம் பண்ண விரும்புகிறேன். சாத்தானின் சோதனைகளை நான் புறக்கணிக்க விரும்புகிறேன். இயேசுவுக்கு முன் என் முன்னாள் வாழ்க்கையின் மோசமான வழிகளில் அவன் என்னை வஞ்சித்து என்னை மீண்டும் கவர்ந்திழுப்பதை நான் விரும்பவில்லை. தயவு செய்து உமது பரிசுத்த ஆவியின் மூலம் எனக்கு அதிகாரம் அளித்து, உமது கிருபையால் என் இருதயத்தை நீர் கைப்பற்றும்போது, இயேசுவை போல மறுரூபமாகும்படி செய்யும். பிதாவே , எனக்காக இயேசுவின் தியாகத்தை மதித்து, பரிசுத்த ஆவியின் செல்வாக்கிற்கு அடிபணிந்து உமக்காக ஒவ்வொரு நாளும் வாழ விரும்புகிறேன். ஆவியானவரின் பரிந்துரையினாலும், குமாரனின் அதிகாரத்தினாலும் நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.